Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

இந்தியாவில் தடம் பதிக்கிறது டெஸ்லா

படம் : கூகுள்

சென்னை, 18 பிப்ரவரி- டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தனது இந்திய வருகையை அந்நிறுவனம் சூசகமாக அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த தகவலை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் மற்றும் பேக்-எண்ட் குழு என சுமார் 13 ரோலுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு லிங்க்ட்இன் தளத்தில் வெளியாகி உள்ளது. ஸ்டோர் மேனேஜர், சர்வீஸ் மேனேஜர், கஸ்ட்மர் சப்போர்ட் எக்ஸிக்யூட்டிவ் என இந்த பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டெல்லி மற்றும் மும்பை நகரில் பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் என்ட்ரி கொடுக்க டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இருப்பினும் இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்கள் அந்த நிறுவனத்தின் இந்திய வருகையை தாமதப்படுத்தி உள்ளது.

அண்மையில் 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட உயர் ரக சொகுசு கார்களுக்கான சுங்க வரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக குறைத்தது. இது நாட்டில் மின்சார சொகுசு கார் உற்பத்தியாளர்களுக்கு பிரகாசமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில்தான் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆட் தேர்வை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகன சந்தை மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், உலகம் முழுவதும் மின் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2003-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக மஸ்க் இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top