
கோலாலம்பூர், 17 பிப்ரவரி — மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கடந்த ஆண்டு 3,09,322 இணைய உள்ளடக்கங்களை நீக்குமாறு சமூக ஊடக தள வழங்குநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம், காவல்துறை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, MCMC இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், சமூக ஊடக தளங்கள் 2,89,287 பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அகற்றப்பட்ட உள்ளடக்கங்களில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பதிவுகள் 1,89,485 (65.5%), மோசடி தொடர்பானவை 63,652 (22%), தவறான தகவல்கள் 17,245 (5.9%), அருவருப்பான மற்றும் ஆபாசமான பதிவுகள் 13,805 (4.7%) என அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
“கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும், ஆனால் அதை தவறாக பயன்படுத்த முடியாது. தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் அல்லது சமூக ஒழுங்கை பாதிக்கும் இணைய உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த MCMC கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்க, இணையத்தளங்களை முறையாக கண்காணிப்பது அரசின் முக்கிய பொறுப்பு என்றும், சட்டத்திற்குப் புறம்பான உள்ளடக்கங்களை விரைவாக நீக்க MCMC தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
-யாழினி வீரா