
பினாங்கு, 6 ஏப்ரல்: பினாங்கு மாநிலத்தின் கிழக்கு கரை மாவட்டத்தில் உள்ள சுங்கை ஆரா என்ற சிறிய பகுதியில், கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து தேநீர் விற்பனையில் தனது பெயரை பதித்திருக்கும் ஒரு சாதனை நாயகன் – திரு. ஜெ.மு. ஜெயசீலன். வழக்கமான தேநீர் கடையல்ல, ‘சீலன் தேநீர் ஸ்டேஷன்’ என்றழைக்கப்படும் அவரது சிறிய வணிகம், இப்போது அந்தப் பகுதியின் அடையாளமாகவே பரிணாமம் பெற்றுள்ளது.
சாதாரண தேநீரில் சுவையின் மாயையை கலப்பதோடு, மனதையும் வெல்வதற்கான கலை ஜெயசீலனுக்குத் தெரியும். தேநீர், காஃபி, மைலோ, இஞ்சி நீர் என பல வகை பானங்களை தனித்துவமான சுவையுடன் பரிமாறும் அவர், வாடிக்கையாளர்களின் நாளை இனிமையாக்கும் ஒரு நாளாந்த விசேஷமாக மாறியுள்ளார்.

அந்த இடத்தில் சந்திக்கப்படும் வாடிக்கையாளர்கள் தளர்வான முறையில் உரையாடுவதும், மகிழ்வுடன் நேரம் கழிப்பதும் வழக்கமாகி விட்டது. அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை, ஆசிரியர்கள் முதல் தொழிலாளர்கள் வரை, மலாய், சீன, இந்தியர்கள் என அனைத்து சமூக மக்களும் இங்கு புறந்தள்ளப்படாமல் ஒரே பந்தத்தில் இணைகின்றனர்.
“சீலன் தேநீர் ஸ்டேஷன்” இன்று தேநீர் விற்பனைக்கும் மேல் ஓர் இடமாக உருவெடுத்துள்ளது – அது சமூக உறவுகளுக்கு பாலமாகவும், நண்பர்களுக்கிடையிலான உரையாடலுக்கான சந்திப்புக் கூடமாகவும் மாறியுள்ளது. இதற்கு காரணம், திரு. ஜெயசீலனின் அன்பும், மனப்பான்மையும் தான்.
வாடிக்கையாளர்களை வெறும் வாடிக்கையாளர்களாக அல்லாமல் நண்பர்களாகப் பார்த்து, அவர்களுடன் நெருங்கிப் பழகும் முறை, அந்த கடைக்கு ஒரு உயிரணுவைப் போல இருக்கிறது. இதனால் தான், ஒருமுறை அங்கு சென்றவர் மீண்டும் மீண்டும் தேநீருக்காகவே அல்ல, அந்த நட்புக்காகவும் திரும்பிச் செல்கிறார்.

சிறிய தொழிலை பெரிய இதயத்துடன் நடத்தும் திரு. ஜெயசீலன், வியாபாரத்தையும் சமூக சேவையாக மாற்றியவர். அவரது கடை, சுங்கை ஆரா மக்களின் நாளைத் தொடங்கும் இடமாக மட்டுமல்ல, ஒரு கலாச்சாரத் தளமாகவும் பரிணாமம் அடைந்துள்ளது.
இன்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், “சீலன் தேநீர் ஸ்டேஷன்”க்கு ஒரு தடவை செல்லாமலே நாளை தொடங்குவதில்லை என்றால், அது ஆச்சரியம் அல்ல. இது ஒரு தேநீர் விற்பனையாளரின் சாதனை மட்டுமல்ல, சமூகத்தின் உள்ளங்களை கவர்ந்த மனித நயத்தின் வெற்றி கதையாகும்.
-வீரா இளங்கோவன்