
சென்னை, ஏப்ரல் 26 – தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் கொலைச் சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக, மாநில காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் உறுதியுடன் அறிவித்துள்ளார்.
ஒரு செய்திக் குறிப்பில், அவர் கூறியதாவது, “தமிழகத்தில் 2017 முதல் 2020 வரை கொலை வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக 2019ஆம் ஆண்டு 1,745 கொலை வழக்குகள் இடம்பெற்றன. ஆனால் 2021ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது,” என்று தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு, கடந்த 12 ஆண்டுகளில் மிகக் குறைவான 1,563 கொலை வழக்குகளே பதிவு செய்யப்பட்டிருப்பதை அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்குக் காரணமாக, காவல்துறையின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் இருந்ததாகவும் கூறினார்.
அதோடு, ரவுடி சம்பந்தப்பட்ட கொலைகளும் கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 354 கொலை சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலத்தில் 340 சம்பவங்களாக குறைந்துள்ளதாக தகவல் வெளியிட்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 3,645 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 242 பேருக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வழங்கப்பட்டதாகவும், மேலும் 68 பேரின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கினார்.
இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், தமிழகத்தில் குற்றச்செயல்கள் மேலும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-தாரணி