
கோலாலம்பூர், 5 மார்ச் — ஏரா எஃப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கடுமையாக விமர்சித்தார். இந்தியர்களின் மத நம்பிக்கையை பெரிதும் அவமதிக்கும் விதமாக அந்த ‘வேல் வேல்’ வீடியோ வெளியிடப்பட்டது. எனவே, ஆஸ்ட்ரோ வானொலி நிர்வாகம் முழுமையான விசாரணை நடத்தி, இதற்குப் பொறுப்பானவர்களை உடனடியாக தக்க நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தைப்பூச புனித நாளை வழிபாடு, சடங்கு, காவடி எடுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை கேலி செய்த காணொலி, பல சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி இந்தியர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொலியில் உள்ளவர்களின் செயல்கள் இந்தியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சமூகத்தில் கலவர உணர்வை தூண்டும் விதத்திலும் உள்ளது என அமைச்சர் கோபிந்த் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் மலேசியாவின் அடையாளத்தையும், பரஸ்பர மரியாதை மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கிறது என்று அவர் கவலை வெளியிட்டார். தைப்பூச விழாவில் காவடி எடுக்கும் புனிதச் செயல்களை கேலி செய்திருப்பது, சமூக ஒற்றுமைக்கு முரணானது என்பதையும் அமைச்சர் கோபிந்த் வலியுறுத்தினார்.
-காவியா கிருஷ்ணன்