
சென்னை, 7 நவ. – நடிகர் கமல் ஹாசனின் புகழ்பெற்ற திரைப்படமான ‘நாயகன்’ மீள்வெளியீட்டு விழாவின் போது, கமலா சினிமாஸ் அரங்கில் மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சி அனைவரின் மனதையும் உருக்கியது.
திரையரங்கின் பெரிய திரையில், கமல் ஹாசன் மற்றும் ரோபோ சங்கர் இடையிலான இனிய தருணங்கள் காணொளி வடிவில் காட்டப்பட்டன. “Kamal Sir’s films will not be the same without Robo Shankar uncle – We miss you and love you always” எனும் வரிகள் திரையில் தோன்றியபோது, ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான சூழல் நிலவியது.
ரோபோ சங்கர், கமல் ஹாசனின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், ரசிகர்கள் கொண்டாட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர். அவரது உற்சாகமும் நகைச்சுவையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நாயகன் மீள்வெளியீட்டு விழாவிலும் அவர் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற உணர்வில் பலரும் மனம் நெகிழ்ந்தனர்.
கமலா சினிமாஸின் இந்த அஞ்சலி, தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவைக்கு புதிய உயிர் கொடுத்த ரோபோ சங்கரின் பங்களிப்பை நினைவூட்டும் வகையில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
-யாழினி வீரா


