
சைபர்ஜெயா, 30 ஜனவரி — மலேசியாவில் போலி தகவல்களை தடுக்கும் முயற்சியாக அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் ‘Chatbot Sebenarnya.my’ எனும் தகவல் சரிபார்ப்பு உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ‘Chatbot’ மூலம், மக்கள் எழுத்து வடிவிலான தகவல்களை இணையத்தில் விரைவாக சரிபார்க்க முடியும். இது மலாய், ஆங்கிலம், மண்டரின் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் தகவல்களை உறுதிப்படுத்த உதவும். தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறுகையில், “Sebenarnya.my இணையதளம், பெர்னாமா மற்றும் MyCheck போன்ற தளங்களின் உதவியுடன் தகவல்களை பரிசோதிக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். தற்போது, இந்த வசதி எழுத்து வடிவில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில், தகவலை உறுதிப்படுத்த படங்கள் மற்றும் காணொளிகளையும் அனுப்பும் வசதியை சேர்க்க உள்ளோம்,” என்றார்.
சைபர்ஜெயாவில் நடந்த ‘Chatbot Sebenarnya.my’ தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஃபஹ்மி, இந்த முயற்சி இணையத்தில் பரவும் போலி செய்திகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும், விரைவாக சரியான தகவல்களை பெற இது உதவும் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம், பொதுமக்கள் எந்த தகவலும் உண்மையா என்பதை சுலபமாக சரிபார்க்க முடியும். மேலும், போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் ‘Sebenarnya.my’ முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-வீரா இளங்கோவன்