Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசியாவில் பொங்கல் திருநாளுக்காக பொது விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்: தமிமுன் அன்சாரி உரை

படம் : வீரா இளங்கோவன்

கோலாலம்பூர், 26 ஜனவரி — மலேசியாவில் நடைபெறும் ஹரிராயா, சீனப் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கான பொது விருந்தோம்பல் நிகழ்ச்சிகளைப் போல, தமிழர்களின் முக்கிய பண்பாட்டு திருநாளான பொங்கலுக்காகவும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.

தமிழ் இஸ்லாமிய அமைப்புகள், மலேசிய இந்திய முஸ்லிம் அமைப்புகள், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவர் பேசினார்.

“மலேசியாவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் தாய்மொழி தமிழ் மூலம் ஒன்றுபட்டு வாழ்ந்த காலம் நினைவுக்கு வருகிறது. இன்றைய சூழலில் மெல்லிய இடைவெளி தோன்றியுள்ளது. தமிழர்களின் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவது மிக முக்கியம்,” என்றார்.

மலேசிய அரசின் சமய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை அவர் பாராட்டினார். “உலகில் அதிக உயரம் கொண்ட திருமுருகன் சிலை மலேசியாவில் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் தைப்பூச திருநாளுக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

பின்னர், “இந்த நாட்டில் உள்ள 530 தமிழ்ப் பள்ளிகள் குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அருள்மிகு மாரியம்மன் ஆலயங்களும் பள்ளிவாசல்களும் இணைந்து அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகள் இன்றும் சமய நல்லிணக்கத்தைச் சின்னமாக்குகின்றன,” என்றார்.

நிகழ்ச்சியில் மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர்கள், இலக்கியவாதிகள், மற்றும் பல முன்னணி ஆளுமைகள் பங்கேற்றனர். அதிகமான பெண்களும் குழந்தைகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top