
கோலாலம்பூர், 8 பிப்ரவரி — மற்ற மதப் பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்பதை வழிநடத்துவதற்கான விதிமுறைகள் உருவாக்க தேவையில்லை என மலேசிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இநேற்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
“முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மத விதிகளை அறிவார்கள். எனவே, இதற்காக கூடுதல் வழிகாட்டிகள் தேவையில்லை. இன்று நான் இங்கு வந்துள்ளேன், ஆனால் எந்த மதச்சார்ந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்கள் வழக்கமானவை, அதை சிக்கலாக்க வேண்டாம்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடவிருக்கும் தைப்பூசம் தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிட பிரதமர் நேற்று பத்துமலையில் வருகையளித்தபோது இந்த கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தேசிய இஸ்லாமிய மத விவகார மன்றத்தின் தலைவர் சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் தெரிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.