
தெமர்லோ, 5 மார்ச் — கடந்த ஆண்டு 15 மணிநேரம் இடைவிடாது உடற்பயிற்சி செய்து உலக சாதனை படைத்த 28 வயதான ஜெய் பிரபாகரன் தேவர் குணசேகரன், இவ்வாண்டு மூன்று மலேசிய சாதனைகளை உருவாக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பகாங், கோலா லிப்பிசைச் சேர்ந்த அவர், இந்நோக்கில் தினமும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
“கோலாலம்பூரில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில் இந்த சாதனைகளை நிலைநிறுத்தவிருக்கிறேன். என் குடும்பத்தார், குறிப்பாக தாயார் மற்றும் நண்பர்கள் எனக்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர்,” என்று Dr Kjey என்ற பெயரிலும் அறியப்படும் ஜெய் பிரபாகரன் தெரிவித்தார்.
இம்முறையான சாதனை முயற்சிக்காக, தனது பயிற்சியை ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டதாக அவர் கூறினார். “நாளுக்கு மூன்று முறை பயிற்சி செய்கிறேன். இந்த முறை கால்களை அதிகம் பயன்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன், அதற்கேற்ப கூடுதல் பயிற்சியும் செய்கிறேன். மேலும், உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களை செய்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.
பல சவால்களை தாண்டி தனது பயிற்சியை தொடர்ந்து வருவதாகக் கூறிய ஜெய் பிரபாகரன், இந்த முயற்சி இளைஞர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். ஏப்ரல் மாதம் நடைபெறும் போட்டியில், ஒவ்வொரு உடற்பயிற்சியையும் ஐந்து மணிநேரத்திற்குள் குறைந்தது 3,000 முறை செய்யத் திட்டமிட்டுள்ளேன் என அவர் உறுதிமொழி எடுத்தார்.
-கவியரசி கிருஷ்ணன்