
ஈப்போ, 5 மார்ச் — கோலா குராவு அருகே ஜாலான் பந்தாய், பாடு 9, பாடு பியான்டாங் பகுதியில் இன்று காலை இரண்டு வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு தம்பதி உயிரிழந்தனர்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு (JBPM) பேராக் செயல்பாட்டு துணை இயக்குநர் சபரோசி நோர் அகமத் தெரிவித்ததாவது, விபத்தில் 59 வயது ஓட்டுநரும், அவரின் 66 வயது மனைவியும் உயிரிழந்தனர். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே இவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர், பின்னர் அவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த தம்பதியின் 13 வயது மகன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார் என்றும் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது என்றும் சபரோசி கூறினார்.
கோலா குராவு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) மீட்பு குழு, காலை 7.29 மணிக்கு அவசர அழைப்பு பெற்றதையடுத்து, சம்பவ இடத்திற்கு (9 கிமீ தூரம்) விரைந்தது. விபத்தில் ஒரு கெலிசா ரக வாகனம் மற்றும் ஹொண்டா சிட்டி ரக வாகனம் ஆகிய இரண்டு வாகனங்கள் மோதி கொண்டன.
ஹொண்டா சிட்டி வாகனத்தின் ஓட்டுநர் காணாமல் போனதால், அவரை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-யாழினி வீரா