
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மலேசிய மேலவையில் நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொடர்பு மற்றும் பல்லூடக சட்ட மசோதா, இணைய குற்றங்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் முக்கிய சட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா, சட்டம் 588-ன் கீழ், இணைய மோசடிகளை தடுக்கும் மற்றும் அவற்றை சமாளிக்க தேவையான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. இது தொடர்பாக மலேசிய தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், “மாமன்னரின் உத்தரவின்படி, மக்களிடையே பரவலாக நிகழும் மோசடிகளின் அறிகுறிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். இந்த சட்ட திருத்தத்தின் மூலம் எங்களிடம் புதிய அதிகாரங்கள் மற்றும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இன்று, திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான முதல் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமூக ஊடகங்களில் பெருகும் மோசடிகளை கட்டுப்படுத்தவும், செக்ஷன் 211 மற்றும் செக்ஷன் 233 போன்ற நடைமுறையில் உள்ள விதிமுறைகளை மேம்படுத்தவும் இந்த திருத்தம் உதவும்” என்று கூறினார்.
இந்த புதிய சட்டத்தின் மூலம் இணையத்தில் நடைபெறும் மோசடிகள், போலி தகவல்கள் மற்றும் பிற குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாகவும், இது மக்கள் பாதுகாப்பிற்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-வீரா இளங்கோவன்