
ஜொகூர் பாரு, 15 பிப்ரவரி — ஜொகூர் – சிங்கப்பூர் பாலத்தில் நடந்த மோதலுக்கு உட்பட்டவர்களை விசாரணைக்காக காவல்துறை அழைத்துள்ளது.
ஜொகூர் பாரு தெற்கு மாவட்டத்தின் OCPD உதவி ஆணையாளர் ரவுப் செலமாட் தெரிவித்ததாவது, “இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, நாம் விரைவாக விசாரணையை தொடங்கியுள்ளோம். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியுடன், சாட்சிகளை உறுதிப்படுத்தி, மோதலுக்கான காரணத்தையும் கண்டறிய முயற்சி செய்கிறோம்” என்றார்.
விசாரணைக்கு உதவ, சம்பவம் குறித்த தகவல் கொண்ட பொதுமக்கள் 07-2182323 என்ற காவல்துறை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சம்பந்தபட்ட காணொளி முகநூல் பயனர் “Fandyjunas” என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு நிமிட கால வீடியோவில், இரண்டு நபர்கள் ஒரு பேரூர்தி (MPV) மூலமாக வந்தபின் சாலையில் தகராறு செய்து பின்னர் மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ ஒரு லாரி டிரைவரால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களின் மோதலை உடனிருந்த பிற வாகன ஓட்டிகள் சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, மொத்தமாக 3.3 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
-வீரா இளங்கோவன்