
ஈப்போ 11 ஜூன்: பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோக்கில் உள்ள கம்போங் ஸுங்கை பயூங் மற்றும் கம்போங் ஸுங்கை தியாங் பாரோஹ் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததைக் குறித்து, தெலுக் இன்தான் பிரிவு சுற்றுச்சூழல் அமைச்சு (JAS) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
நேற்றைய தினம் நிகழ்ந்த இந்த பரிதாபம் குறித்து இன்று மதியம் 12.50 மணிக்கு முறைப்பாடு பெறப்பட்டதாக ஜேஏஸ் தெரிவித்துள்ளது. இன்று மேற்கொண்ட பார்வையிடலில், சம்பந்தப்பட்ட பகுதிகளின் ஏரிக்குள் உள்ள நீர் சிவப்புமிகு மஞ்சள் நிறத்தில் மாசடைந்திருந்ததாகவும், அதன் மேற்பரப்பில் அமைதியான நிலை காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணைக்காக வந்த அதிகாரிகளிடம், அருகிலுள்ள பெலச்சான் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலிருந்து கழிவுகள் வந்திருக்கும் எனக் கிராமவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொழிற்சாலையின் கழிவுகளை வெளியேற்றும் சாலைகளை மையமாக கொண்டு விசாரணை நாளையும் தொடரும் எனத் துறை கூறியுள்ளது. உண்மையான காரணம் கண்டறியப்பட்டதும், அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
-யாழினி வீரா



