
கோலாலம்பூர்: மலேசியாவின் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங், கல்வியமைச்சர் பட்லினா சிட்க்கை நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தளத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில், கெடாவின் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பகாங் மாநில ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இப்பள்ளிகளின் நீண்டநாள் பிரச்சனைகளைத் தீர்க்க கல்வியமைச்சின் துணை அவசியம் என அமைச்சர் கோபிந் சிங் தெரிவித்தார்.

பள்ளிகள் தொடர்பான சிக்கல்களுக்கு கல்வியமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என கல்வியமைச்சர் உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கல்வியமைச்சோடு இணைந்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக வரும் வாரத்தில் மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் என கோபிந் சிங் தெரிவித்தார்.
தற்போது இந்த பள்ளிகள் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்கவும், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி விரைவில் சென்றடையவும் தாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் உறுதியாகக் கூறினார்.
-யாழினி வீரா