
சூடான்: கடந்த ஒரு ஆண்டில் சூடானில் 221 குழந்தைகள் ஆயுதக் குழுக்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான குழந்தைகள் நல நிறுவனம் (யுனிசெஃப்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுவோரின் தரவுகளை சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப் போரில், 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரினால், 1.4 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
யுனிசெஃப்பின் தகவலின்படி, போர் தொடங்கியதில் இருந்து மட்டும் 61,800 குழந்தைகள் நாடு முழுவதும் இடம்பெயர்ந்துள்ளனர்.
போரின்போது இரு படைகளும் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கட்டாய திருமணங்களுக்கு உட்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வன்முறையின் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 30% ஆண் குழந்தைகள் என்றும், 5 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகளும், 4 பச்சிளம் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கெடாரெஃப், கஸ்ஸாலா, கெசீரா, கார்ட்டூம், நதி நைல், தெற்கு கோர்டோஃபான், வடக்கு டார்பர், மேற்கு டார்பர் ஆகிய பகுதிகளில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பலர் ஆயுதக் குழுக்களின் பழிவாங்கல் அச்சத்தால் புகார் அளிக்க தயங்குவதாகவும், உண்மையான பாதிப்புச் சிறிதாக இல்லை என்றும் ஐ.நா. அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.