
புது தில்லி, 26 ஜனவரி — கலை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், வர்த்தகம், கல்வி, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும்.
இதன் அடிப்படையில், 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. மொத்தம் 139 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் மற்றும் பிரபல நடனக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா ஆகியோரும் பத்ம பூஷண் விருது பெற்றோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
“உற்சாகமும் உறுதியும் மிகுந்த ஆளுமையால் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த அஜித் குமார், தனது சாதனைகளால் உலக வரைபடத்தில் இந்திய திரையுலகின் சிறப்பை நிலைநாட்டியுள்ளார். அவருக்குக் கிடைத்த பத்ம பூஷண் கௌரவம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பெருமையை அளிக்கிறது,” என நடிகர் சங்கம் தெரிவித்தது.
அதேபோல, “பரதநாட்டியத்தின் அழகையும் ஆழத்தையும் உலகமெங்கும் பரப்பிய கலைஞர் ஷோபனா மற்றும் அவரது அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக கிடைத்த இந்த விருது, தென்னிந்திய கலையின் உயர்விற்கு சான்றாக உள்ளது,” என்றார்.
இதேநேரத்தில், கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், உள்ளிட்ட பலர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.
– வீரா இளங்கோவன்