
கோலாலம்பூர் 4 பிப்ரவரி — பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மின்சார கட்டண உயர்வு சாதாரண மக்களை பாதிக்காது என்று உறுதியாக தெரிவித்தார். இந்த உயர்வு முதன்மையாக தொழில் துறையையும் மிகப்பெரிய பணக்காரர்களையும் (மஹா கயா) மட்டுமே பாதிக்கும் என்று அவர் கூறினார்.
” நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய பணக்காரர்களுக்கே மின்சார கட்டண உயர்வு ஏற்படும். பொதுமக்களின் 85% இற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என்று பாராளுமன்றத்தில் பிரதமர் கேள்வி நேரத்தில் விளக்கமளித்தார்.
பெர்சத்து கட்சியின் மாசாங் தொகுதி எம்பி வான் அக்மட் ஃபைசல் வான் அக்மட் கமால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், மின்சார கட்டண உயர்வு நாட்டின் கல்வி மற்றும் மருத்துவ துறைகளை நிதியளிக்க மிகவும் அவசியமானது என்று கூறினார்.
“தொழில்துறை மற்றும் பெரிய பணக்காரர்கள் மட்டும் இதனால் பாதிக்கப்படுவார்கள். மகா கயா எனப்படும் இந்த பிரிவினரை நாம் பாதுகாக்க வேண்டுமா? அவர்களிடம் கூட வரி விதிக்காமல், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு நிதி எங்கிருந்து வரப்போகிறது?” என்று அன்வார் வினவினார்.
தொழில் துறைக்கு ஏற்படும் செலவு மற்றும் பொருளாதார விளைவுகளை முன்வைத்து மலேசிய சீன வணிகர் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ACCCIM) முன்னதாக மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அன்வார், “இந்த உயர்வு நீண்ட கால நன்மைக்கு துணை புரியும்” என உறுதிபட தெரிவித்தார்.
ஜூலை 2024 முதல், மலேசியா தீபகற்பத்தில் மின்சார அடிப்படை கட்டணம் 14.2% உயர்ந்து, 45.62 சென் (கிலோவாட்-மணி) ஆக மாற்றப்படும். ஆனால், இது பொதுமக்களின் பெரும்பாலான பகுதிகளை பாதிக்காது என்று Tenaga Nasional Berhad (TNB) உறுதிபடுத்தியுள்ளது.
அடுத்த மின்சார கட்டண மறுஆய்வு ஜூலை 2025ல் மேற்கொள்ளப்படும்.
-யாழினி வீரா