
கோலாலம்பூர், 19-ஜனவரி, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானமும், மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவும் இணைந்து பத்துமலை வளாகத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா 2025 மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மஹிமா தேசிய தலைவர் டத்தோ ந. சிவக்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் R. நடராஜா, மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், “மக்கள் கலைஞர்” கவிமாறன் மற்றும் ஆலய தலைவர்கள் பொதுமக்கள் என 5000 பேருக்கு மேல் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தின் மேன்மையும் முன்நிறுத்தி கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தல், உறி அடித்தல், கோலம் போடுதல், மாலை தொடுத்தல்,கோலாட்டம், ஆடல்- பாடல்,பாரம்பரிய நிகழ்வுகள், கிராமிய நிகழ்ச்சிகளும் மகளிர், இளையோர் மற்றும் சிறுவர்களுக்கான பல்வேறு போட்டி அங்கங்களும் நடைபெற்றன. மிக கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒற்றுமையாக பொங்கல் வைத்தனர்.