
புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே ஒரு நோயாளி மட்டுமே இன்று காலை வரை சிலாங்கூரில் அம்பாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் என சிலாங்கூர் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் ஷம்சுதின் தெரிவித்துள்ளார்
மேலும், சைபர்ஜெயா மருத்துவமனையில் இருந்து மூன்று நோயாளிகள் கோலாலம்பூர் மருத்துவமனைக்குப் (HKL) மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது சைபர்ஜெயா மருத்துவமனையில் விபத்து தொடர்பான எந்த நோயாளியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்திய சைபர்ஜெயா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஷஹபுதின் இப்ராஹிம், அங்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும், சிலர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஏப்ரல் 1 அன்று காலை 8.10 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, 500 மீட்டர் சுற்றளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்தன. விபத்தால் சுமார் 9.8 மீட்டர் ஆழமும், 21 x 24 மீட்டர் பரப்பும் கொண்ட பள்ளம் உருவாகியது.
நேற்று மதியம் 3 மணியளவில், சுகாதார அமைச்சகம் 86 பேர் அரசு மருத்துவமனைகளில், மேலும் 46 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது. வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக இடைவிடுதி மையங்களில் தங்கியுள்ளனர், மேலும் பலர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-யாழினி வீரா