
கோலாலம்பூர், 8 பிப்ரவரி — முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பான பரிந்துரைகளை ரத்து செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவையின் முடிவை பாராட்டுவதாக பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இணையானது என்றும், இது சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் ஒரு நல்ல நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம்கள், இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும் என்ற முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை அமைச்சரவை ரத்து செய்துள்ளது. இந்த முடிவு, மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பேணுவதற்கும், சமூக அமைதியை உறுதி செய்வதற்கும் வழிவகுக்கும் என லோகபாலா தெரிவித்தார்.
இதற்கிடையில், பத்துமலை திருத்தலத்தில் நடைமுறைக்கு வரவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அரசுக்கு பிரதமர் உத்தரவிட்டதற்காக, அவருக்கு தனி நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-வீரா இளங்கோவன்