
புத்ராஜாயா, 2 மே: மலேசியாவுக்கு முதன்முறையாக வருகை தந்த கொசோவோ ஜனாதிபதி டாக்டர் வியோசா ஒஸ்மானி சாத்ரியு அவர்களுக்கு, இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜாயா பெர்டானா புட்ரா வளாகத்தில் மரியாதையுடன் உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் காலை 9 மணியளவில் அவரை வரவேற்றார். பின்னர், இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, 103 வீரர்கள் மற்றும் 3 அதிகாரிகள் கொண்ட மபடைப்பிரிவின் மரியாதைக் காப்புப் படையை ஒஸ்மானி பார்வையிட்டார்.
விஸ்மா புட்ரா வெளியிட்ட அறிக்கையின் படி, பிரதமர் அன்வார் மற்றும் ஒஸ்மானி, இருநாடுகளுக்கும் பொதுவான பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், 2025 ஆம் ஆண்டில் மலேசியா ஆசியான் தலைவர் பதவியை வகிக்க உள்ளதை சுற்றியுள்ள விவாதமும் இடம்பெற்றது.
மலேசியா, 2008 அக்டோபர் 30-ஆம் தேதி கொசோவோவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் ஆசிய நாடாகும். 2011 மார்ச் 18ஆம் தேதி இருநாட்டு துறைமுக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
2024 ஆம் ஆண்டில் இருநாட்டு வர்த்தக மதிப்பு RM28.55 மில்லியனை கடந்துள்ளது. இதில் மலேசியா RM25.92 மில்லியன் மதிப்பில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. முக்கியமாக, பாமாயில், மின்னணு சாதனங்கள் மற்றும் தொழிற்சாலை தயாரிப்புகள் உள்ளடங்கும். கொசோவோவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது பெரும்பாலும் கனிமங்கள் மற்றும் தகடுகள் ஆகும்.
-யாழினி வீரா