Tazhal Media – தழல் மீடியா

/ Jun 08, 2026
Latest News
tms

பல்கலைகழக மாணவி கொலை வழக்கு: 14 பேரிடம் போலீசார் விசாரணை – நெருங்கிய நபர் மீது சந்தேகம்

சிப்பாங், ஜூன் 26: சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி பாடத்தில் படித்து வந்த 20 வயதான மாணவி மணீஷப்ரியத் கௌர் அக்கார் கொலையுண்ட வழக்கில், போலீசார் இதுவரை நெருங்கிய நண்பர், விரிவுரையாளர் உட்பட 14 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர்ஹிசாம் பாகமான் கூறுகையில், இன்னும் சில முக்கிய நபர்களையும் விசாரணைக்காக விரைவில் அழைக்க உள்ளதாகவும், மணீஷாவின் ATM அட்டை பயன்படுத்தப்பட்ட சந்தேகத்திற்கான வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியும் தொடர்கிறது எனவும் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணைகளில், மாணவியை நெருங்கிய நபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

சரவாக்கின் கூச்சிங் நகரத்தைச் சேர்ந்த மணீஷப்ரியத், கடந்த வியாழக்கிழமை காலை 10.28 மணிக்கு சைபர்ஜெயா தங்கும் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விடுதியில் தனியாக வசித்திருந்த அவர், மற்ற ஐந்து அறை தோழிகள் 21 ஜூனுக்குப் பிறகு விடுமுறைக்காக சென்றுவிட்டதால், தனியாக இருந்துள்ளார்.

மரணத்திற்கு முன் விரைவில் பரீட்சை எழுத இருந்ததாகவும், தலையில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மரணப்பரிசோதனை முடிவில், கூர்மையற்ற பொருளால் தலையில் அடிபட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த கொலை வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் தொடரப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top