
பகாங், 8 ஏப்ரல்: மேன்மை தங்கிய பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் பில்லா ஷா, மக்கள் எப்போதும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக சாலையில் பயணிக்கும்போது அவதானத்துடனும் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜாலான் குவாந்தான்-செரோக் பாலோ பகுதியில் மோட்டார்சைக்கிள் பள்ளத்தில் மோதி விழுந்ததில், 19 வயதான முகமட் ஹசீம் ஹசிமி முகமட் ஷம்சுதீன் என்பவர் தலையில் பலத்த காயமடைந்து, தெங்கு அம்புவான் ஆப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார். நேற்று சம்பவம் நடந்த கம்போங் செரி செம்பாக்காவில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சுல்தான் நேரில் சென்று நேர்கொண்டார்.
இச்சம்பவத்தின் பின்னர் பகாங் சுல்தான், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தங்களது உயிர் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார். இந்த உரை, இன்று பகாங் கெசுல்தானன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.
-யாழினி வீரா