
சுபாங் ஜெயா, 2 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸில் புத்ரா ஹர்மோனி சாலை அருகே 500 மீட்டர் நீளமுள்ள வாயுக்குழாய் தீப்பற்றிய சம்பவத்தில், சுமார் 200 பேர் பாதுகாப்பு மையத்தில் (PKTK) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளையும் போலீசார் மூடிவிட்டனர். பொதுமக்கள் அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், அந்த இடத்தை படம் பிடிக்கவோ, காணொளி எடுக்கவோ கூடாது என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில், தீயணைப்புத் துறையின் வாகனங்கள், போலீசாரின் படைகள் மற்றும் பெட்ரோனாஸ் அதிகாரிகள் இடம்பெயர்வதை காணமுடிந்தது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஓமர் கான், 74 குடும்பங்களைச் சேர்ந்த 364 பேர் இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். தீயின் உயரம் 30 மீட்டருக்கும் அதிகமாக இருந்ததாகவும், வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை கடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் தலைவர், டத்தோ நோர் ஹிஷாம் முகமது, 11 அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 325 அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாகவும், தீ 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிற்பகல் 3.34 மணிக்கு கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
-யாழினி வீரா