
கோலாலம்பூர், 31 மார்ச் : மலேசியா, பல இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் ஒரு தனித்துவமான நாடாக திகழ்கிறது. இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், சமூகங்களிடையே நிலையான ஒற்றுமையைப் பேணுவதற்கும் முஸ்லிம் மக்கள் முக்கியப் பொறுப்பு வகிக்க வேண்டும் என பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
2025 நோன்பு பெருநாளை முன்னிட்டு வழங்கிய சிறப்பு வாழ்த்து உரையில், அனைவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க வேண்டும், இரக்கத்தையும் மனித நேயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “இந்த அடிப்படைகள் இல்லாமல், மலேசியா ஒரு அமைதியான மற்றும் நிலையான நாடாக திகழ முடியாது” என அவர் கூறினார்.
இந்தாண்டின் ஹரி ராயா பெருநாள், ஒற்றுமையையும் நல்லொழுக்கத்தையும் பிரதிபலிக்கும் ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும், இதன் மூலம் பொறுப்புணர்வும் நேர்மையும் கொண்ட தனிநபர்களை உருவாக்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக, தொலைக்காட்சி நேரலை வழியாக வழங்கிய தனது ஹரி ராயா வாழ்த்து செய்தியில், ஒற்றுமை மலேசியாவின் அடிப்படை உறுதிப்பாத்தையாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் இணைந்து வாழ்வதன் மூலம் ஒரு உறுதியான சமூகத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை இல்லையெனில், சமூகத்திற்குள் பிளவுகள் உருவாகும். நாம் அனைவரும் ஒரே குடையில் வாழ்கிறோம். எனவே, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் வேண்டும்” என பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
-யாழினி வீரா