
கோலாலம்பூர், 4 செப்டெம்பர் – மலேசிய சைவ சமயப் பேரவை ஏற்பாட்டில், உலகம் முழுவதிலுமிருந்து சைவ அறிஞர்கள், ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் கலாச்சார ஆளுமைகள் ஒன்று கூடும் 7-வது உலக சைவ மாநாடு வரும் செப்டம்பர் 6 மற்றும் 7, 2025 அன்று ஷா ஆலம் Tulip Banquet Hall இல் நடைபெற உள்ளது.
“Saiva Philosophy’s Contribution to Global Peace and Harmony” எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு, சைவத்தின் ஆன்மீகக் கொள்கைகள், உலக சமாதானத்திற்கும் மனித ஒற்றுமைக்கும் செய்யும் பங்களிப்பை ஆழமாக வெளிப்படுத்தும்.
மாநாட்டில் பெரியாரசர் சுவாமிகள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், சைவ தத்துவ விளக்குநர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். உலக அளவில் முக்கியத்துவம் பெறும் தலைப்புகள் – மனித சமத்துவம், இறைவனின் இயல்பு, ஆன்மிக வழிகாட்டல், நவீன வாழ்வில் சைவ தத்துவத்தின் பாதிப்பு போன்றவை – இங்கு விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், திருமுறைப் பன்னிசை, ஆன்மிக இசை, பாரம்பரிய நடனங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுவதால், இம்மாநாடு சைவ சமயத்தின் பண்பாட்டு செழுமையையும் வெளிப்படுத்தும்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் கட்டணம் RM130 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை வரை நடைபெறும் இவ்விழா, சைவ மதப்பற்றுள்ள அனைவருக்கும் ஆன்மீகத் தெளிவை அளிக்கும் சிறப்பு சந்திப்பாக அமையும்.
மலேசிய சைவ சமயப் பேரவை, இந்த மாநாட்டில் பெருமளவு பங்கேற்குமாறு பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது. உலக சமாதானம், மனித நேயம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த மாநாடு, மலேசியாவுக்கு பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா



