Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

தைப்பூசம் 2026: பந்தல் நடத்துநர்களுக்கு இரவு 11 மணி கட்டுப்பாடு – PDRM & PHEB நடவடிக்கைக்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு முழு ஆதரவு

Picture : Tazhal

GEORGE TOWN, PENANG, – வரவிருக்கும் தைப்பூசம் 2026 திருவிழாவை முன்னிட்டு, இரவு 11.00 மணிக்குப் பிறகு காவடி ஏந்தல் மற்றும் விரத நிறைவேற்ற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டிற்கு, பினாங்கு இந்து அறநிலைய வாரியம் (PHEB) மற்றும் மலேசிய அரச காவல்துறை (PDRM) ஆகியவற்றின் உத்தரவுக்கு, மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு, தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த இரவு 11.00 மணி கடைசி நேரம், 1 பிப்ரவரி 2026 (தைப்பூச தினம்) அன்று மட்டும் அமலில் இருக்கும். இதன் முக்கிய நோக்கம், காவடி ஏந்தி வரும் பக்தர்கள் அனைவரும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி மலைக்கோயில் மூடப்படும் நேரத்திற்கு முன் அடைந்து, தங்களது விரதங்களையும் பிரார்த்தனைகளையும் முறையாக நிறைவேற்றுவதற்காகும்.

இரவு 11 மணிக்குப் பிறகு காவடிகள் அல்லது தேர்கள் வருகை தரும் போது, கோயில் நிர்வாகத்திற்கு பெரும் சவால்கள் உருவாகின்றன. இறுதி பூஜைகள் மற்றும் சன்னிதி மூடும் நிகழ்வுகளை ஒழுங்காக மேற்கொள்ள போதிய நேரம் இல்லாமல் போவதால், திருவிழாவின் ஆன்மீக ஒழுங்கும் புனிதத்தன்மையும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அதேபோல், தைப்பூச தினத்தில் தண்ணீர் பந்தல் (Thanneer Panthal) நடத்தும் அனைவரும் இரவு 11.00 மணிக்குள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என PDRM அறிவித்துள்ளது. இதன் மூலம், பக்தர்கள் தேவையற்ற தாமதமின்றி கோயில்நோக்கி செல்வது உறுதி செய்யப்படும்.

பக்தர்களும் காவடி ஏந்துபவர்களும் தங்களது யாத்திரை நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மலேசிய இந்து தர்ம மாமன்றம் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது. “ஒவ்வொரு பக்தரும் அவசரம் அல்லது பதற்றம் இல்லாமல், மன அமைதியுடனும் முழு பக்தியுடனும் தங்களது விரதங்களை நிறைவேற்றுவதே எங்களின் நோக்கம்,” என மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு தலைவர் திரு. தனபாலன் நந்தகுமார் தெரிவித்தார்.

தைப்பூச தினத்தில் இரவு 11.00 மணிக்கு முன் கோயிலை அடையும் பக்தர்கள், போதிய நேரத்துடன் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற முடியும் என்றும் அவர் கூறினார். PHEB, PDRM மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து, தைப்பூசம் 2026 விழா ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் ஆன்மீக நிறைவுடன் நடைபெற உறுதியாக செயல்படுவதாக, மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு, மீண்டும் உறுதி தெரிவித்துள்ளது.

Scroll to Top