Tazhal Media – தழல் மீடியா

/ Sep 27, 2026
Latest News
tms

லாங்கூர் – பெர்சிப் பாண்டுங் போட்டியில் ரசிகர்கள் மோதல்

பெட்டாலிங் ஜெயா, 7 நவ. – மலேசியா லீக் ஆசியா 2 போட்டியில் சிலாங்கூர் எப்சி மற்றும் இந்தோனேசிய அணியான பெர்சிப் பாண்டுங் அணிகள் மோதியபோது, மைதானம் முழுவதும் ரசிகர்கள் மோதலால் கலக்கமடைந்தது.

பெட்டாலிங் ஜெயா நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி ஆரம்பத்தில் அமைதியாக நடந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் பெர்சிப் பாண்டுங் அணி முன்னிலை பெற்றதும், ரசிகர்களுக்கிடையே பதற்றம் அதிகரித்தது. சில ரசிகர்கள் மைதானத்தின் எல்லையை மீறி விளையாட்டு பகுதியில் நுழைய முயன்றதால், பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக தலையிட்டனர்.

நிகழ்வின் போது சிலர் பாட்டில் மற்றும் கொடிகளை வீசியதாகவும், சிலர் வீரர்கள் நோக்கி கத்தி நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் போட்டி சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

செலாங்கூர் அணி தோல்வியடைந்ததனால், சில உள்ளூர் ரசிகர்கள் கோபம் வெளிப்படுத்தியதாகவும், இதனால் நிலைமை மேலும் பதற்றமானதாக மாறியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. பெர்சிப் பாண்டுங் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்த சம்பவம் குறித்து விளையாட்டு அமைப்புகள் விசாரணை தொடங்கியுள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் ரசிகர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top