
கோலாலம்பூர், 25 செப். – மலேசியாவின் முன்னோடி ரெகே இசைக் கலைஞரும், தயாரிப்பாளரும், கலாச்சாரச் சின்னமாக திகழ்பவருமான சாசி த டான், தனது 25 ஆண்டு இசை பயணத்தை சிறப்பிக்கும் விதமாக ‘மை பெர்ஃபெக்ட் யார்டு’ எனும் புதிய ஆல்பத்தைக் கொண்டு வருகிறார். ரெகே, பாப், உலக இசை மற்றும் நவீன இசை பாணிகளை ஒன்றிணைக்கும் அவரது தனித்துவமான முயற்சி, இசை உலகில் அவரின் இடத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த ஆல்பத்தின் மையமாக, செப். 26ஆம் தேதி வெளியாக உள்ள புதிய பாடல் ‘ஃபையர்’ இடம்பெற்றுள்ளது. ஆர்வம், தைரியம் மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் இப்பாடலில், மலேசியாவில் வசிக்கும் தென்னாப்பிரிக்க மருத்துவ நிபுணரும் பாடகருமான டாக்டர் ஜெருஷா நைடூ தனது இனிமையான குரலை இணைத்துள்ளார்.
மேலும், ‘ஃபையர்’ பாடலுக்கான இசை வீடியோ சாசியின் முதல் AI படைப்பாக உருவாகியுள்ளது. ஒன் டிராப் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்ட் ஹார்ட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த வீடியோ, புதுமை, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாக திகழ்கிறது.

தொடர்புத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன், மைக்ரியேட்டிவ் வெஞ்சர்ஸ் மற்றும் டானா கண்டுஙான் கிரியேட்டிப் (இண்டஸ்ட்ரி முசிக்) வழங்கிய நிதியுதவி மூலம் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் சாசியின் கனவு ஆல்பம் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், ரெட்வன் மொபைல் நிறுவனமும் ‘ஃபையர்’ இசை வீடியோவிற்கான கூட்டாண்மையில் பங்கேற்றுள்ளது. மலேசியர்களுக்கு மலிவான, அதிவேக தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதில் பெயர் பெற்ற இந்த நிறுவனம், இப்போது பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் தனது பங்கு விரிவுபடுத்தி வருகிறது.
“மக்களை அர்த்தமுள்ள முறையில் இணைப்பது எங்களின் கடமை. 5ஜி போஸ்ட் பேய்ட் திட்டங்களை மாதம் வெறும் RM68 இலிருந்து வழங்கி வருகிறோம். சாசி த டானுடன் பணிபுரிவது எங்களுக்குப் பெருமை,” என ரெட்வன் மொபைல் தலைமைச் செயல் அதிகாரி அமீன் அமென்றான் குறிப்பிட்டார்.

இப்புதிய ஆல்பம் மற்றும் அதன் வெளியீட்டை சோனி மியூசிக் மலேசியா ஆதரிக்கிறது. இவர்களின் வலுவான தளம் மற்றும் அனுபவம், சாசியின் இசையை பிராந்திய அளவிலும், உலகளாவிய அளவிலும் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மை பெர்ஃபெக்ட் யார்டு’ ஆல்பம் வரும் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும்.
சாசி த டானின் இந்த புதிய அத்தியாயம், அவரின் தனிப்பட்ட இசைப் பயண வளர்ச்சியையும், இசை மூலம் பல்வேறு கலாச்சாரங்களையும் தலைமுறைகளையும் ஒன்றிணைக்கும் சக்தியையும் கொண்டாடுகிறது.
-யாழினி வீரா


