
பூச்சோங், 23 ஏப்ரல்: நூற்றாண்டுகளாக பக்தர்களுக்கு ஆன்மீகத்தையும், சமூக ஒற்றுமையையும் அளித்து வரும் பூச்சோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் புதிய பல்நோக்கு மண்டபக் கட்டுமானம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு பெறும் என கோவில் தலைவரும், புத்ரி ஏபிஎஸ் குழுமத்தின் தலைவருமான டத்தோ ஏபி சிவம் உறுதியுடன் தெரிவித்தார்.

அண்மையில், இந்த மண்டபத்திற்கு நிதி திரட்டும் விழா அந்த மண்டபத்தின் கீழ்தளத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சமூகத் தலைவர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, டத்தோ ஏபி சிவம், பல நல்ல உள்ளங்கள் இலைமறைகாயாக வழங்கிய உதவியால் கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு முடிவிற்கு முன்னதாக முழுமையாக முடிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மண்டபம் கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கப்பட்டதிலிருந்து இன்று வரை 43 நிகழ்வுகளை நடத்தி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மண்டபத்தின் கீழ் மாடியில் 400 இருக்கைகள் மற்றும் மேல் மாடியில் சுமார் 1,000 பேர் அமரக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பூச்சோங் மற்றும் அதன் சுற்றுப்புற சமூகத்தின் அடையாளமாக இந்த மண்டபம் திகழும் எனவும், இத்தகைய பல்நோக்கு மண்டபங்கள் நாட்டின் பிற கோவில்களிலும் கட்டியமைக்கப்பட வேண்டும் எனவும் டத்தோ சிவம் வலியுறுத்தினார்.

விழாவில் இந்திய classical மற்றும் பன்னாட்டு கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர். “மக்கள் கலைஞர்” கவிமாறன் தனது நகைச்சுவையான அறிவிப்புகள் மற்றும் உரையுடன் நிகழ்வை தொடக்கத்திலிருந்தே இறுதி வரை மகிழ்ச்சியான விழாக்கோலமாக மாற்றினார்.
-யாழினி வீரா