
படம் : கூகுள்
அமெரிக்கா, 31 ஜனவரி- அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார்.
விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத்திற்கு மேலாக விண்வெளி நடை புரிந்து அவர் முறியடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்வெளி நடையின்போது, அவர் சர்வதேச விண்வெளி மையத்தின் வன்பொருட்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அங்கு இருந்த தேவையற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அவர் அகற்றினார்.
மேலும், சுனிதா வில்லியம்ஸ் டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் என்ற பகுதிகளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார்.
-ஶ்ரீஷா கங்காதரன்