
படம் : சி.என்.ஏ தளம்
வாஷிங்டன், 30 ஜனவரி- அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தை அடுத்து ராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் இறங்கினர். ஹெலிகாப்டர் மற்றும் படகு மூலமாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவசர நிலை குறித்த அறிவிப்பும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இருந்து 60 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஈகிள் ஃப்ளைட் ‘5342’ எண் கொண்ட பயணிகள் விமானம், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலைய ஓடுபாதையை இந்திய நேரப்படி இன்று (ஜன.30) காலை 7.30 மணி அளவில் நெருங்கும் போது பயிற்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் யுஹெச்-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதியது. தரையில் இருந்து சுமார் 400 அடி உயரத்தில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதியது. அதில் தீ பிடித்து விமானம் வெடித்து போடோமாக் ஆற்றில் விழுந்தது. விமானம் சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த போது விபத்து ஏற்பட்டது.
-ஶ்ரீஷா கங்காதரன்