
கோலாலம்பூர், 3 நவ. – தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாசில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் சாதனப் பயன்படுத்துதலில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளார். “டிஜிட்டல் சாதனங்கள் பெற்றோர்களுக்குப் பதிலாக குழந்தைகளை கவனிக்க முடியாது. அவை நானிகள் அல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் ஒரு சிறுவன் ஆன்லைன் விளையாட்டு காரணமாக தனது சகோதரனால் காயமடைந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய அவர், இது பெற்றோர்களின் கவனக்குறைவால் ஏற்படும் அபாயங்களின் எடுத்துக்காட்டு எனக் குறிப்பிட்டார். குழந்தைகள் இணையத்தில் என்ன பார்கிறார்கள், என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிக்காமல் விட்டால், அது அவர்களின் மனநிலை மற்றும் நடத்தை மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஃபாஹ்மி தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, 2025 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act 2025) மற்றும் தற்போதைய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 (Communications and Multimedia Act 1998) ஆகியவற்றின் மூலம் இணைய தளங்கள் மற்றும் கேமிங் தளங்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் குழந்தைகள் தீய உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
பெற்றோர்கள் குழந்தைகளின் திரை நேரத்தை கட்டுப்படுத்தி, அவர்களுடன் நேரத்தை கழித்து, அவர்கள் பார்க்கும் உள்ளடக்கங்களைப் பற்றி திறந்த உரையாடலை நடத்த வேண்டும் என ஃபாஹ்மி அறிவுறுத்தினார். “பிள்ளைகளுக்குப் பாசமும் கவனமும் நம்மால் மட்டுமே கிடைக்கும், சாதனங்களால் அல்ல,” என அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.
இந்த அறிவுரை, மலேசிய குடும்பங்களில் டிஜிட்டல் ஒழுக்கத்தை வலுப்படுத்தும் வகையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா



