
படம்: கூகுள்
மெல்பர்ன், 26 ஜனவரி- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இரு முறை சாம்பியனான அரினா சபலென்காவை வீழ்த்தி பட்டம் வென்றார் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா,19-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதினார்.
இதில் 32 வயதான மேடிசன் கீஸ் 6-3, 2-6, 7-5 என்ற செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். கடைசியாக அவர், 2017-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.
ஆஸ்திரேலிய ஓபனில் கடைசி கடந்த 2023மற்றும் 2024-ம் ஆண்டுகளில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறையும் பட்டம் வென்று மார்ட்டினா ஹிங்கிஸின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் அரினா சபலென்கா இருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேடிசன் கீஸ். மார்ட்டினா ஹிங்கிஸ் 1997, 1998, 1999-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 முறை ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடியிருந்தார். தனது 32-வது வயதில் முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரில் மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
-ஶ்ரீஷா கங்காதரன்