
பாடலாசிரியர் சினேகன் மற்றும் சின்னத்திரை நடிகை கன்னிகா, காதலித்து 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சமீபத்தில் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இதை இருவரும் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இதனுடன், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை அண்மையில் சந்தித்த தம்பதியினர், தங்களது குழந்தைகளை அவரிடம் அறிமுகப்படுத்தினர். குழந்தைகளை தங்க வளையல்களால் ஆசீர்வதித்த கமல், அவர்களுக்கு அழகிய பெயர்களும் சூட்டினார்.
சினேகன் – கன்னிகா தம்பதியினர் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பதிவில்,
“கமல் சார் எங்கள் குழந்தைகளுக்கு “காதல் கன்னிகா சினேகன்” மற்றும் “கவிதை கன்னிகா சினேகன்” என பெயர் சூட்டினார். இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. அவருக்கு எங்கள் நன்றி!”
என்று பகிர்ந்து கொண்டனர்.
சினேகன், திரைப்பட உலகைத் தவிர்த்து அரசியலிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். 2018ஆம் ஆண்டு கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். பின்னர், 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். தற்போதும் அக்கட்சியில் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
-யாழினி வீரா