Tazhal Media – தழல் மீடியா

/ May 05, 2025
Latest News
tms

பாகிஸ்தான் பிரதமரின் மலேசியா வருகை ஒத்திவைப்பு

Picture: Google

கோலாலம்பூர், மே 5: காஷ்மீரில் ஏற்பட்ட தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட சர்வதேச பதற்றங்களை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தனது மலேசியா அரசுப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இந்த பயணம் மே 10, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ஷெஹ்பாஸ் ஷரீப்புடன் தொலைபேசியில் உரையாடியதிலேயே இந்த முடிவை அவர் தெரிவித்ததாக தகவல். “பாகிஸ்தான் தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான சூழ்நிலைகளை நான் முழுமையாக புரிந்து கொள்கிறேன். நிலைமை விரைவில் சமநிலை அடையட்டும் என மலேசியாவின் நம்பிக்கையை தெரிவித்தேன்,” என அன்வார் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அன்வார் மேலும் கூறுகையில், “மலேசியா எந்தவொரு வன்முறையையும் கடுமையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலுக்குப் பொறுப்பாளிகளை கண்டறிய சுதந்திரமான மற்றும் வெளிப்பட்ட விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம்,” என்றார்.

மேலும், பாகிஸ்தானும் இந்தியாவும் இருநாடுகளாகவும், மலேசியாவுடன் நெருங்கிய நட்புறவை வைத்திருப்பதால், இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு மலேசியா கட்டாயமான பங்கு வகிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஷெஹ்பாஸ், மலேசியாவின் நீண்ட நாள் நட்பு உறவை பாராட்டியதோடு, தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் விரைவில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

இன்ஷா அல்லாஹ், சரியான நேரத்தில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப்பை மலேசியாவில் அமைதி மற்றும் நல்வாழ்வுடன் வரவேற்க நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

-யாழினி வீரா

Scroll to Top