
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார். மலேசிய வானொலி ஒளிபரப்பு துறை இயக்குநருடன் ஆலோசித்து இதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் மகரா சங்கராந்தி சேரட்டி கீதாஞ்சலி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்பு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிய ‘கலப்படம்’ நிகழ்ச்சி, ஏராளமான இளம் கலைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பில் இல்லாததால், அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் தலைவர் டத்தோ காந்தராவ் வலியுறுத்தினார்.
அவரது கோரிக்கையை ஏற்று, இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இதற்காக நிகழ்வில் திரண்டிருந்த மக்களின் பெரும் கரவொலி எழுந்தது. மேலும், மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் சமூகநலத் திட்டங்களுக்கு பத்தாயிரம் வெள்ளி மானியம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்த விழாவில் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-யாழினி வீரா