
ராவுப், 6 ஏப்ரல்: பஹாங் மாநிலம் ராவுப் அருகே உள்ள உலு டோங் பகுதியில் உள்ள லாத்தா ஜாரூம் அருவியில் இன்று பிற்பகல் 18 வயதான இளைஞர் முகமத் ஷாருல் இக்வான் ஆதம் ஹரீஸ் இஸ்லாமி, தனது இரு நண்பர்களுடன் அங்கு குளிக்கச் சென்றிருந்தபோது, புகைப்படம் எடுக்கும் முயற்சியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பஹாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மூத்த அதிகாரி சலாஹுதீன் ஈசா கூறியதாவது, சம்பவம் குறித்து 4.10 மணியளவில் அவசர அழைப்பு பெற்றதும், ரவ்ப் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
மூழ்கிய இளைஞர் நண்பர்களுடன் இருந்தபோதிலும் நீரில் இறங்கவில்லை என்றும், அருவியின் பின்னணியில் புகைப்படம் எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்ததாகவும் கூறப்பட்டது. மக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் 5.42 மணியளவில் சுமார் 3.04 மீட்டர் ஆழத்தில் அவரை கண்டெடுத்தனர்.
அந்த இடத்தில் உள்ள வேகமான நீரோட்டம் மீட்பு பணியை கடுமையாக்கியதாகவும், இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும், உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-யாழினி வீரா