Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

தீபாவளி ஸ்க்ரீன் தான் நம்ம கொண்டாட்ட மேடை!

கோலாலம்பூர், அக். 19 – தீபாவளி என்றாலே அது ஒளியின் திருவிழா மட்டுமல்ல, தமிழ் சினிமாவை கொண்டாடும் நாளும்தான் என்கிறார் மலேசிய விஜய் ரசிகர் மன்றத்தின் (MVF) தலைவர் மற்றும் த.வெ.க. (மலேசியா) தலைவர் ஷர்மணாத் ரமண்.

“தீபாவளிக்கு தமிழ் படம் பார்ப்பது, முருக்கு சாப்பிடுற மாதிரி தான் – அது நம்ம கொண்டாடத்தில் ஒரு பாகம். கோவிலுக்கு போவது, குடும்பத்தோட சாப்பிடுறது மாதிரி தான் படம் பார்ப்பதும். படம் பார்க்கலைனா ஏதோ ஒன்று குறைஞ்ச மாதிரி தோணும்,” என அவர் சிரித்தபடி கூறினார்.

2000-களின் இறுதியில் மலேசியாவில் நடிகர் தளபதி விஜய்க்காக முதன்முறையாக ஒரு அதிகாரபூர்வ ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் ஷர்மணாத். 2017-ல் அவர் தலைமையிலான MVF குழுவே மெர்சல் படத்துக்காக காலை 7 மணிக்கு மலேசியாவின் முதல் தீபாவளி சிறப்பு திரையிடலுக்கு அனுமதி பெற்றது என்பது வரலாற்று தருணமாக அமைந்தது.

“அந்த நேரத்தில மக்கள் வருவாங்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனா அந்நேரம் பெரும் கூட்டம் கூடினது, பலர் பாரம்பரிய உடையில் வந்தார்கள். அந்த தருணம் இந்த கலாச்சாரம் எவ்வளவு ஆழமா நம்முள் உறைந்திருக்குனு நிரூபிச்சது,” என ஷர்மணாத் நினைவுகூர்ந்தார்.

அதன் பின்னர், காலை நேர திரையிடல் ஒரு வழக்கமாக மாறியது — குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளிவரும் போது ரசிகர்கள் அதை ஒரு தீபாவளி கொண்டாட்டமாகவே மாற்றுகிறார்கள்.

சினிமா ரசிகர் மன்றங்கள் தங்களின் சொந்த நிதியிலேயே திரையரங்குகள் முன்பதிவு செய்வது முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் வரை ஏற்பாடு செய்வதாகவும், அது தீபாவளி கொண்டாட்டத்தின் உற்சாகத்தை இன்னும் உயர்த்துவதாகவும் அவர் கூறினார்.

OTT தளங்களின் வளர்ச்சி இருந்தாலும், தீபாவளியில் தியேட்டரில் படம் பார்க்கும் பாரம்பரியம் குறையவில்லை என ஷர்மணாத் நம்புகிறார். “பெரிய திரையில் கூட்டத்தோட படம் பார்ப்பது ஒரு தனி ஆனந்தம். அதுக்கு மாற்றம் எதுவும் கிடையாது. ரசிகர்களின் கொண்டாட்டமும் குறையல — அது இன்னும் வளருது,” என அவர் உறுதியாக கூறினார்.

உலகெங்கும் இந்து மதத்தவர்கள் அக். 20-ஆம் தேதி தீபாவளியை நன்மை தீமையை வென்ற நாளாகக் கொண்டாடவுள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் இந்து பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 14ஆம் திதியில் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கும் தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறார் ஷர்மாநாத்.

-யாழினி வீரா

Scroll to Top