
கோலாலம்பூர், 7 அக். – மலேசியா கால்பந்து சங்கம் (FAM) மீது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என அந்த அமைப்பு இன்று விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் FIFA, ஏழு மரபுச் சான்று பெற்ற வீரர்களின் ஆவணங்களில் பெரும் முரண்பாடு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து FAM-க்கு சுமார் RM1.8 மில்லியன் அபராதமும், ஒவ்வொரு வீரருக்கும் RM11,000 அபராதமும், 12 மாத தடை விதிக்கப்பட்டது.
ஆனால், FAM வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆவண பிரச்சினை என்பது வெறும் நிர்வாகப் பிழை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில், சம்பந்தப்பட்ட பணியாளர் தவறுதலாக முகவரிடமிருந்து வந்த நகலைப் பதிவேற்றியதாகவும், அசல் ஆவணங்கள் தேசிய பதிவு துறையிலிருந்து (JPN) பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
FAM, “இந்த விவகாரம் எந்தவித போலி ஆவணங்களுடனும் தொடர்பில்லை. வீரர்கள் எந்த தவறும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளது. மேலும், தாங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வ மேல்முறையீட்டு செயல்முறையைத் தொடங்கியுள்ளோம் என்றும், மலேசியா கால்பந்தின் நம்பகத்தன்மையை பாதுகாக்க உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தற்பொழுது உலக கால்பந்து வட்டாரத்தில் பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ள நிலையில், FAM தங்களது தெளிவான விளக்கத்தால் நிலைமையைச் சீர்படுத்த முயற்சி செய்து வருகிறது.
–யாழினி வீரா



