
நீலாய், 05 நவ. – நெகிரி செம்பிலான் நீலாய் பகுதியில் உள்ள ஒரு பேட்டரி தொழிற்சாலையில், மலேசிய குடியுரிமை துறை (JIM) நடத்திய திடீர் சோதனையில் 184 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த சோதனை காலை 7.50 மணியளவில் தொடங்கி சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது. மொத்தம் 219 வெளிநாட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டதில், 184 பேர் சட்டவிரோத குடியேற்றமாக அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் வயது 20 முதல் 49 வரை உள்ளவர்களாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். சோதனையின்போது சிலர் இயந்திரங்களின் பின்னால் மற்றும் தயாரிப்பு பகுதிகளுக்கிடையில் மறைந்து தப்பிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும் வேலை அனுமதி இல்லாமல் பணிபுரிந்ததோடு, அடையாள ஆவணங்கள் அல்லது பாஸ்போர்ட் இல்லாமையும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 1959/63 ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டம், 1966 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் மற்றும் 1963 குடியேற்ற விதிகள் கீழ் விசாரணைக்காக டெபோ இமிக்ரேஷன் லெங்கெங் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குடியேற்றத் துறை இந்த வகையான சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிட நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் கடுமையான சோதனைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா



