
படம் : கூகுள்
சென்னை, 25 மார்ச்- ‘டிராகன்’ பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய்.
பிப்ரவரி 21-ம் தேதி வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதன் வெற்றிக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். தற்போது விஜய்யும் ‘டிராகன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருப்பது சமூக வலைதளங்களின் பார்வையை ஈர்த்துள்ளது.
தளபதி விஜய்யைச் சந்தித்தது குறித்து ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ”என்னுடன் இருப்பவர்களுக்கு நான் விஜய் சாரின் விசிறி எனத் தெரியும். சாரை ஒரு நாள் முழுதகுதியுடன் சந்திக்கவும், அவருடன் இணைந்து பணியாற்றவும் கடுமையாக உழைத்து வருகிறேன்”, என்று கூறியுள்ளார். விஜய் சாரைச் சந்தித்தேன்; அவருக்கு நேர் எதிரில் அமர்ந்தேன். வழக்கமாக அதிகமாக பேசுவேன். விஜய் சாருடைய தீவிர ரசிகன் என்பதால், எனது குழுவினர் நான் பேசுவதற்காக காத்திருந்தனர்.
அவரோ என்னை உற்றுப் பார்த்தார்…வார்த்தைகள் நொண்டியடித்தன.என் கண்ணீர் மட்டும் வழிந்தது. என் குழுவினர் ஆச்சரியப்பட்டார்கள். ஏன் இவர் மீது மட்டும் இவ்வளவு அன்பு என்று. “இது அன்பா,பக்தியா என்று உங்களுக்குச் சொன்னால் புரியாது. என் நண்பன் பிரதீப் ரங்கநாதனுக்குப் படம் பண்ண வந்தேன். “சிறப்பான எழுத்துகள் ப்ரோ” என்று நான் ஆராதிப்பவர் சொல்வதைக் கேட்டு வாழ்க்கை என்ற வட்டம் பூரணம் அடைந்ததாக உணர்கிறேன். இது போதும்… நன்றி ஜெகதீஷ் ப்ரோ, அர்ச்சனா மேடம். மிகப்பெரிய பரிசு இது” என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.
-ஶ்ரீஷா கங்காதரன்