
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — நாட்டின் இறையாண்மையும் உரிமையும் நிலைத்திருக்க அரசாங்கம் அரச தந்திர உறவு, சட்டங்கள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
“நாட்டு உரிமையும் இறையாண்மையும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. கடல் நடுவில் ஒரு சிறிய பவளப் பாறை மட்டுமிருந்தாலும் கூட, அதைத் தற்காக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக அரச தந்திர உறவு, சட்டங்கள், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மலேசியா இந்த ஆண்டில் ஆசியான் தலைவராக பணியாற்றவுள்ள நிலையில், இந்தப் பொறுப்பை சிறப்பாக நிர்வகிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். “மலேசியா இந்தப் பகுதிக்கே வழிகாட்டும் வகையில் தனது ஆற்றலை நிரூபிக்க வேண்டும். அதன்மூலம், அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடுகளில் தெளிவான இலக்குகளை அமைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
அத்துடன், மலேசியா அமைதி கொள்கையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வன்முறையையும் அடக்குமுறையையும் எதிர்த்து தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூற வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.
இவ்வளவு ஆண்டுகளாக மலேசியா தனது நடுநிலைப் பார்வை மற்றும் சமரச மனப்பான்மையால் உலகளவில் மதிப்பிற்குரிய நாடாக திகழ்ந்துள்ளது. இதை மேலும் நிலைநாட்டும் வகையில், அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த வகையில், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும், சர்வதேச மட்டத்தில் தனது கொள்கைகளை உறுதியாக நிலைநாட்டவும் மலேசிய அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
-வீரா இளங்கோவன்