
சிப்பாங், 26 பிப்ரவரி — மலேசியாவின் குறைந்த செலவிலான விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, வரவிருக்கும் நோன்புப் பெருநாள் பண்டிகை காலத்திற்காக, மலேசியா தீபகற்பத்திலிருந்து சரவாக், சபா, மற்றும் லாபுவான் நோக்கிப் பயணிக்க, ஒரு வழி விமானக் கட்டணத்தை RM400க்கு கீழ் வழங்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 வரை, 16,000 இருக்கைகள் கொண்ட 90க்கும் மேற்பட்ட இரவு நேர சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
“அனைத்து மலேசியர்களும் மலிவான வான்பயண வசதியை பெற வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார். இது, விமானச்சீட்டுகளின் உயர்ந்த விலையைக் குறைக்க அரசாங்கம் வழங்கிய உதவித் தொகை (சப்ஸிடி) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
“ஏர் ஏசியா போன்ற முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து, விமான போக்குவரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கும், மக்கள் நலனை மேம்படுத்துவதற்கும் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது,” என்று அமைச்சர் கூறினார்.
-யாழினி வீரா