Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

ரி.ம.27,742 மதிப்பிலான போலி கைபேசி அக்சஸரிகள் பறிமுதல்

கோலாலம்பூர், நவ. 3 – பெராக் மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வுக் செலவு அமைச்சகம் (KPDN) நடத்திய சிறப்பு தடுப்புச் சோதனையில், மொத்தம் 913 யூனிட் போலி கைபேசி அக்சஸரிகள் மற்றும் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரி.ம.27,742 ஆகும்.

KPDN பெராக் இயக்குநர் தாத்துக் கமல்லுடின் இஸ்மாயில் தெரிவித்ததாவது, ஐபோ, மன்ஜங், பாரீத் புந்தார் மற்றும் டைப்பிங் பகுதிகளில் அமைந்த நான்கு வணிக நிலையங்களில் ஒரே நாளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறினார். சோதனையின் போது “பதிவு செய்யப்பட்ட வர்த்தக அடையாளம்” (registered trademark) தவறாக பயன்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதிகாரிகள் மேலும் விளக்கியதாவது, இந்த வணிக நிலையங்கள் Akta Cap Dagangan 2019 (வர்த்தக அடையாளச் சட்டம் 2019) அடிப்படையில் சட்டம் மீறியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வணிகஸ்தர்கள் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

தாத்துக் கமல்லுடின் இஸ்மாயில் கூறியதாவது, “இந்த நடவடிக்கை வணிக முறைகேடுகளை தடுப்பதற்கும், நியாயமான வணிக நடத்தை உறுதிப்படுத்துவதற்கும் மிக முக்கியமானது. போலி பொருட்கள் மக்களின் பாதுகாப்பிற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் மூல அடையாளத்துடன் கைபேசி அக்சஸரிகள் மட்டுமே வாங்க வேண்டும்,” என்றார்.

KPDN அமைச்சகம் இனியும் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற வணிகஸ்தர்களை கண்காணித்து, கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Scroll to Top