
கோலாலம்பூர், 25 மார்ச் – மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் மலேசிய அரசு காவல்துறை (PDRM) அதிகாரிகள் மற்றும் வீரர்களின் தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் பங்களிப்பையும் அவர் கௌரவித்தார். 218வது காவல்துறை தினத்தை முன்னிட்டு, காவல்துறையின் மானாட்டுத் தலைவர் ஆக உள்ள சுல்தான் இப்ராஹிம், காவலர்கள் தங்கள் உயிரையும் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் சட்டத்தையும், சட்ட ஒழுங்கையும் பராமரிக்க பணியாற்றும் ஆற்றலை வியந்து பாராட்டினார்.
“அவர்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அளிக்க தொடர்ந்து தன்னலமின்றி செயல்படுகின்றனர். இவ்வாறு பணியாற்றுவது எளிதான விஷயம் இல்லை, இருப்பினும் அவர்கள் வீரத்துடன், உறுதியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல் புரிகின்றனர்” என்று பேரரசர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
மேலும், “PDRM அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்கள் கடமைகளை உறுதியாக மேற்கொண்டு, நாடு முழுவதும் மக்களின் நலனுக்காக அயராது உழைக்கிறார்கள். அவர்களுக்கு நான் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் ஆரோக்கியமும் பாதுகாப்பும் வேண்டிக்கொள்கிறேன். ஓய்வுபெற்ற மற்றும் காலமான காவலர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு காவல்துறை தினத்தின் கருப்பொருள் – “Polis dan Masyarakat Berpisah Tiada” (காவல்துறை மற்றும் மக்கள் பிரிக்க முடியாத உறவு) என்பதாகும்.