
Picture : Edison Awards
பினாங்கு, 26 ஜனவரி — உலகத் தமிழர்களால் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்குகள் பெற்று வழங்கப்படும் எடிசன் திரை விருதுகள் பினாங்கு மாநில SPICE ARENA அரங்கில் ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமை மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
பினாங்கு மாநில அரசு அனுசரணையுடன், மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ பரிந்துரையின் கீழ் இவ்விழா நடத்தப்படவுள்ளது.
விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் அடங்கிய இந்த நிகழ்வில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், நடன இயக்குனர்கள் உள்ளிட்ட 33 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தியேட்டர் மற்றும் OTT தளங்களில் வெளியான திரைப்படங்களின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.
இந்திய மற்றும் மலேசிய கலைஞர்கள், நகைச்சுவை நிகழ்வுகள், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதனை மேலும் மெருகூட்ட உள்ளன. புலம்பெயர் தமிழர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இதற்காக வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார், விருதுகளுக்கான Curtain Raiser நிகழ்வு விரைவில் சென்னையில் நடக்கவுள்ளதாகவும், பத்திரிகையாளர் சந்திப்பு இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த நிகழ்வு புலம்பெயர் தமிழர்களின் கலைப் பாரம்பரியத்தை மேம்படுத்தும் விதமாக அமைவது உறுதியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
-வீரா இளங்கோவன்