
சுபாங் ஜெயா, 6 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸில் ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் தீவிபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வந்த “உயிரிழப்பு ஏற்பட்டது” என்ற தகவல் பொய்யானது என சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
“இதுவரை எவரும் உயிரிழந்ததாக எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டு தவறானது,” என அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கு முன்னதாக, ஒரு டிக்டாக்பயனர் தனது தோழியின் சகோதரி உயிரிழந்ததாக தவறான தகவலை வெளியிட்டிருந்தார்.
தற்போது 111 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் ஆபத்தான நிலையான “சிவப்பு மண்டலத்தில்”, 55 பேர் “மஞ்சள் மண்டலத்தில்” மற்றும் 43 பேர் “பச்சை மண்டலத்தில்” உள்ளதாக கூறப்படுகிறது.
சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானோர் செர்டாங், சைபர்ஜெயா மற்றும் புத்ராஜாயா மருத்துவமனைகளில் உள்ளனர். மேலும், சுங்கை புலோ உள்ளிட்ட பிற மருத்துவமனைகளிலும் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீவிபத்தில் 87 வீடுகள் கடுமையாக சேதமடைந்து தற்காலிகமாக குடியிருப்பதற்கே அசாத்தியமாக உள்ளது, மேலும் 148 வீடுகள் பழுது பார்க்கக்கூடிய வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.
-யாழினி வீரா