
பத்துமலை, 11 பிப்ரவரி — தைப்பூசம் சமய நெறியுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், அதன் பின்னர் ஆலய வளாகங்கள் குப்பை கூளங்களாக மாறுவதற்குக் காரணம், பொதுமக்களின் அலட்சியமான அணுகுமுறையென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆலயங்களின் சுற்று வட்டாரங்களில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், அதில் குப்பைகளை போட வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வு இல்லாமையே வருத்தமளிக்கிறது.
இந்நிலையில், கோவில் வளாகங்களின் தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என ‘CLEAN THAIPUSAM’ இயக்கத்தின் தோற்றுநர் விக்னேஸ்வரன் கலியப்பெருமாள் வலியுறுத்தியுள்ளார். “சமய நிகழ்வுகளுக்காக கூடும் பொழுது, அந்த இடத்தின் தூய்மையை பராமரிப்பது அனைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும். எனினும், சிலர் அலட்சியமாக கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவதை பின்பற்றுகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“சில இடங்களில் குப்பைகள் மலைபோல தேங்கியுள்ளன. ஆராய்ந்து பார்த்ததில், அவை தேங்காய் உடைக்கும் புண்ணிய இடங்களாக இருப்பதை அறிந்தோம். அதற்குள் குழந்தைகளின் பம்பர்ஸ் உள்ளிட்ட கழிவுகள் இருப்பதை பார்த்து வருத்தமடைந்தோம். இது மக்களின் பொறுப்பின்மையை வெளிப்படுத்துகிறது,” என்று விக்னேஸ்வரன் பெர்னாமா தொலைக்காட்சியில் தனது கருத்துகளை பகிர்ந்தார்.
தைப்பூசத்தின் போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் லட்சக்கணக்கில் முருகன் கோயில்களில் கூடுகின்றனர். இறைவனை வழிபட வரும் இடங்களில் தூய்மை பாதுகாக்கப்படாதது வேதனையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இதனால், ‘CLEAN THAIPUSAM’ பிரச்சாரத்தை இன, மத பேதங்களை கடந்து, மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு எல்லா சமூகங்களின் ஆதரவும் கிடைத்திருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“பினாங்கு மற்றும் பத்துமலையில் சீன மற்றும் மலாய் சமூகத்தினர் கூட இந்த தூய்மை இயக்கத்தில் பங்கேற்கின்றனர். இது மத பேதமில்லாமல் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கான வெற்றிகரமான எடுத்துக்காட்டு,” என அவர் வலியுறுத்தினார்.
மக்கள் திரளாக கூடும் இடத்தை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, அனைவரும் தூய்மையை காக்கும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
-வீரா இளங்கோவன்